Monday, February 14, 2011

நடுநிலையோடு சொல்லலாம்.. நல்ல நூலென்று..!

எல்லோருக்கும் 2011 புத்தாண்டு வணக்கம்...!

நம்மோட முந்தைய பதிவுல சிலக் குறைகளை சுட்டிக் காட்டியிருந்தோம்..

சிந்துனத் துளியை சீக்கிரம் துடைச்சிட்டா நிரந்தரக் கறையாகாதுங்கிற நினைப்புலதான், நிறையப் பேரு சொல்லிட்டுப் போனதையும் சேர்த்துப் பதிவாப் போட்டோம்..

காயட்டுமுன்னு விட்டிருந்தா காக்காக்களெல்லாம் குத்தம் சொல்ல வாய்ப்பாப் போயிருக்கும்..

ஆனா வெள்ளரிப் பழத்தைப் பிளக்க வெடிகுண்டு வீசுன கதையா என்ன சொல்லிருக்கோம்னு புரிஞ்சுக்காமலேக் கண்டன மின்னஞ்சல்கள் கண்டபடிக் கணக்கில்லாமக் குவிஞ்சுடுச்சு..

விருந்து செலவு கால் பணம், வெத்தலை பாக்கு முக்கா பணம்ங்கிற மாதிரி விளம்பரக் குட்டையில நாம வீழ்ந்துடக் கூடாதில்லையா?

அது போகட்டும்..

புலி உறுமல்களுக்கு மத்தியில புறாக் கடிதமா ஒரேயொரு மின்னஞ்சல் வந்துச்சு.

'என் வானம் நான் மேகம்' என்ற புத்தகத்தின் அறிமுக விழா பற்றியக் கட்டுரை, இணையத் தளத்தில் வெளியாகியிருப்பதைப் படிக்கச்சொல்லியது அந்த மின்னஞ்சல்.. ஏதாவது உள்நோக்கமா இருக்குமோங்கிற உதறல் ஒரு ஓரமா இருக்கவே செஞ்சுது…

கொஞ்சம் முயற்சிக்குப் பின் அந்தப் புத்தகம் கிடைச்சு, படிச்சு, முடிச்சவுடனே மகிழ்ச்சியோட இந்தப் பதிவு.

அயல்நாட்டுத் திரைப்படக் கதைகளின் தொகுப்பு.
இணையத் தளக் கட்டுரையிலேயே அப்படி எந்தப் படமும் இல்லையென சொல்லி விட்டதால் எமக்கு சஸ்பென்சும், ஏமாற்றமும் மிஸ்ஸிங்..

பெற்றோரின் முறையற்ற நடத்தையால் பாதிப்புறும் இளம்பெண்ணைப் பற்றிய 'பைனாகுலர்' என்ற முதல் கதை..

குழந்தைகள் மீது பாசத்தைக் கொட்டும் அங்கிள் தாத்தாவையும் அதற்கானக் காரணத்தையும் நெகிழ்ச்சியாகச் சொன்ன 'எர்ஃகு' என்ற இரண்டாவது கதை..

மூன்றாவதுக் கதை தந்தையைத் தேடிச் செல்லும் மகனின் பயணம் வழியாக பல்வேறு தேசங்களை கண்முன் நிறுத்தும் 'தி இண்டியானோஸ்'.

உரிமைப் போராட்டத்தில் ஈடுபடும் காதலனோடு சேரப் போராடும் நெஞ்சுரம் கொண்டப் பெண் பற்றியது 'லிவ் வித் லைவ்' என்ற நான்காவதுக் கதை.

சலவை செய்பவன், சந்தர்ப்ப வசத்தால் தவறு செய்த அவன் மனைவி, வேற்றின ஆடவனை விரும்பும் மகள் என்று பல தளங்களில் பயணிக்கும் 'மில்க் பாத்' என்ற ஐந்தாவதுக் கதை.

அடக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுவோரின் கோபம் நல்ல மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை என்பதைச் சொல்லும் 'லாஜ்' என்ற ஆறாவது கதை.

சுமார் ஒரு வாரக் காலத்தில் படித்து முடித்த பின்னும் மனசை விட்டு அகல மறுக்கிறது. இனம்புரியாத உணர்வு நீடிக்கிறது இன்னும்... இதற்கு மேல் கதையை சொல்லப் போவதில்லை. புத்தகத்தை விலைக் கொடுத்து வாங்கிப் படியுங்கள்..

எழுபது எண்பதுகளில் பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், வைரமுத்து, பாக்யராஜ், ராஜேந்தர் போன்றோரை "இவ்வளவு நாட்கள் எங்கிருந்தார்கள் இவர்கள்?" என்று வியப்போடு எழுதுவார்கள்.. இந்தப் புத்தகத்தைப் படித்தபின் இந்நூலாசிரியரைப் பற்றி அப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது.

நூலாசிரியரின் உழைப்பும், நுட்பமான பார்வையும் ஒவ்வொருக் கதையிலும் தெரிகிறது..

சிறுசிறுக் குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்

நடுநிலையோடு சொல்லலாம் இதை நல்ல நூலென்று..!

எமது முந்தைய 'புத்தகம் போடுற புத்திசாலிகளே' பதிவில் ""நீங்க புத்தகம் வெளியிட்ட பிற்பாடு அதை படிச்சவங்க ”நல்லாயிருக்குன்னு” சொல்லிக் கடையில தேடி வாங்கி படிச்சாங்கன்னா அதுதான் உங்க எழுத்துக்குக் கிடைச்ச வெற்றி""ன்னு சொல்லப்பட்டு இருந்தது.

இந்த 'என் வானம் நான் மேகம்' என்ற புத்தகம் அந்த வகையில வெற்றியடைஞ்சிருக்கு.

இரவல் வாங்கிய புத்தகத்தைத் திரும்பத் தர வேண்டியிருப்பதால் பணம் கொடுத்து வாங்கி எம்மோட தொகுப்பில் வைக்க வேண்டும்... எங்கே கிடைக்குமிந்தப் புத்தகமென்று பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் தெரிவியுங்களேன் ப்ளீஸ்...!!