Tuesday, January 17, 2012

கிழக்கு நோக்கி வீசுது கெட்டக் காத்து..!

பிறந்திருக்கிற ஆங்கிலப் புத்தாண்டு எல்லோருக்கும் நல்ல படியா அமையட்டும்..
தைமகளும் உயர்வுக்குக் கைகொடுக்க வாழ்த்துக்கள் …

சுமார் அரையாண்டுக்கு மேல அசந்து தூங்கின எம்மை அடிக்கடி எழுப்பிக்கிட்டே இருந்துச்சு நிறைய மின்னஞ்சல்கள். நடக்கிறது நடக்கட்டும்னு நாம பாட்டுக்குக் கிடந்தாலும், உசுப்பேத்தி உசுப்பேத்தியே நம்ம உறக்கத்தைக் கலைச்சுட்டாங்க..
,
மொழி மறந்து போகாம இருக்க மருந்து கொடுக்குறாப் போல இடைவெளி இல்லாம எல்லாப் பக்கமும் நிறைய நிகழ்வுகள் நடந்துக்கிட்டுதான் இருக்கு.

நம்மோட மொழிப் புழக்கம் குறைஞ்சுடக் கூடாதுன்னு முயற்சி எடுக்கிற அமைப்புகளின் கலைநிகழ்ச்சிகள் களை கட்டும் போதே ஊடாக “களைநிகழ்ச்சிகளும்” கலந்துடறதைக் கண்டாதான் கவலையா இருக்கு..

சுருண்டு கிடந்தவன் சுகமாயிட்டு வரும்போது ஸ்லோ பாய்சனைக் கொடுத்த மாதிரி, இடையிடையே இடி விழுந்தாப் போல நடக்கிற இந்தக் கூத்துக்களைப் பார்க்கும் போது கலவரப் படாம இருக்க முடியல.

ஒண்ணுத்துக்கும் உதவாதவங்களெல்லாம் சுயசரிதை எழுதி உயர்ந்தவங்கன்னு சொல்லிக்கிட்டு உலா வந்த காலம் போய் இப்போ மத்தவங்களை விட்டு தன்னைப் புகழச் சொல்லி அதைப் புத்தகங்களா எழுத வச்சு புளங்காங்கிதம் அடையிறது ஃபேஷனாயிடுச்சு. காகிதம் மலிவா கிடைக்கிறதும்,. அச்சிடுற செலவு அதளபாதாளத்துக்கு போனதும் காரணமாயிருக்குமோ.

இருக்கிற பதக்கத்தையெல்லாம் எடுத்துக் குத்திக்கிட்ட இடிஅமீன் மாதிரி தன்னை விளம்பரப் படுத்திக்க விலையா தன் தலையையேக் கூடக் கொடுப்பாங்க போலருக்கு இந்த தனவான்கள்..

ராத்திரியில ராசா வேசம் கட்டி ஆடுறவன் விடிஞ்சும் தன்னை ராசாவாவே நினைச்சிக்கிட்டும், ராசான்னு சொல்லிகிட்டும் திரிஞ்சா என்னாகும்? அவனுக்கு கூத்தாடிங்கிற பேர் கூட மிஞ்சாது.


தன் மொழியைக் கூட முன்னிறுத்தாத திருக்குறள்தான் இன்னும் முதுமையடையாம வாழ்ந்துக்கிட்டு இருக்கு. சொல்வளத்திலும், கருத்துச்செறிவிலும் ஒப்பற்றப் பழம்பாக்களை இயற்றிய பலரோட பேர் கூட தெரியாது நமக்கு. படைப்புகளின் வாழ்நாளைக் காலம் தீர்மானிக்கட்டும், படைப்பாளி என் பெயர் எதற்குன்னு அவர்கள் தன் பெயரை பதிந்து வைக்காமல் கூட இருந்திருக்கலாம்.

அந்தக் காலத்துல வரின்னு உழைச்சவன்கிட்ட பிடுங்கி வாரிக் கொடுத்தாங்க துதி பாடினவங்களுக்கு. அல்லக்கைகளை புகழச் சொல்லி புல்லரிச்சுப் பொரை வீசுறாங்க இப்பவும். அந்தக் கெட்ட காத்து இப்போ கிழக்கு பக்கமா வீச ஆரம்பிச்சுடுச்சோன்னு கொஞ்சம் கலக்கமா இருக்கு.

அடுத்து ஒரு திடீர் தொற்றுநோய் விவகாரம்..
அப்பப்போ சில தொற்றுநோய்கள் தொல்லை கொடுத்துட்டு (சிலது உயிரை வாங்கிடும்) நீர்க்குமிழியா காணாமப் போயிடும். கண்வலி, காலரா, அம்மைநோய், சமீபத்திய சார்ஸ் வரைக்கும் சொல்லலாம்.

அப்படித்தான் ”ஒய் திஸ் கொலவெறி”ன்னு ஒண்ணு இப்போ உலவிக்கிட்டு இருக்கு. அதை எழுதி(!) பாடின அரைவேக்காட்டுக்குக் கண்டனமா யாழ்ப்பாணத் தமிழர் ஒரு பாடலை வெளியிட்டிருக்கார்.


அவருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களும் ஆதரவையும் தெரிவிக்கிறது நம்ம கடமை. ஆனா அந்தப் பாட்டை(!?) அதைப் பாடினவர்தான் எழுதியிருப்பாருன்னு நம்ப முடியல. கீழே இருக்குற வலைப்பூவைப் படித்தால் இந்த மாதிரியானவங்களோட அறிவு முதிர்ச்சி உங்களுக்கே புரியும்.

http://adikkadi.blogspot.com/2009/08/blog-post.html

(விதிவிலக்காக தானாக சிந்திக்கக் கூடியவர்களும் சிலர் இருப்பது ஆறுதல்)

காலம்காலமாக இது போன்றக் கழிவுகள் தமிழோடுக் கலக்கும் போதெல்லாம் காலம் நிலமாயிருந்து வடிகட்டியிருக்கிறது. வெயிலாய் மாறி மேலெடுத்து மீட்டிருக்கிறது..

நம்மை காலைல எழுப்பி விட அலாரம் கடிகாரமும், டிஜிடல் நவீனங்களும் வந்துட்டாலும், இன்னும் சேவல் கூவுறதை நிறுத்தவேயில்லை. அதுபோல நாம கூவுறதைக் கூவி வைப்போம். எழுறவங்க எழட்டும்..!
இளைத்துக் கொண்டே வரும் நம்ம மொழி எழுந்து நிக்கணும்னு சிரத்தையோட செய்யும் முயற்சிகளுக்கு மட்டுமே என்னைக்கும் துணையாக நிற்போம்.